இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் "இரண்டாவது அலையில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கரோனா நோயாளிகள் சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் இறந்தனர் என்பது உண்மையா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார், "கரோனா இறப்புகளைத் தெரிவிப்பதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அதன்படி அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கரோனா பாதிப்புகள் மற்றும் மரணங்கள் குறித்து மத்திய அரசுக்குத் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இருப்பினும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு மரணம் ஏற்பட்டதாக மாநிலங்களோ யூனியன் பிரதேசங்களோ தெரிவிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும், முதல் அலையில் 3095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது அலையில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் கூறியுள்ளார்.