இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், மகாராஷ்ட்ரா, ஒடிசா மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரி வந்தன. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சராக இருந்துவரும் ராம்தாஸ் அத்வாலேவும், நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தேவையுள்ளதாக அண்மையில் கூறியிருந்தார்.
இதனால் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர வேறு எந்த பிரிவினரையும் சாதிரீதியாக கணக்கெடுக்கப்போவதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், "மகாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி ரீதியில் விவரங்களைச் சேகரிக்குமாறு கோரியுள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர, வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று இந்திய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது" எனக் கூறியுள்ளார்.