தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று (08/04/2021) காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், "கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, உடுப்பி, மங்களூரு, மணிப்பால் உட்பட 8 இடங்களில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் ஏப்ரல் 20- ஆம் தேதி வரை இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.