இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை எட்டியுள்ள நிலையில், முதலிரண்டு கரோனா அலைகளில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும், கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் அம்மாநிலத்தை சேர்ந்த 34 ஆயிரத்து 199 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "முதலிரண்டு கரோனா அலைகள் உச்சத்தை தொடுவதை கேரளா தாமதப்படுத்தியது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தற்போது மூன்றாவது அலையின் தொடக்கத்திலேயே, கரோனா பாதிப்புகள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன. அடுத்த மூன்று வாரங்கள் கேரளாவிற்கு முக்கியமானது. ஒமிக்ரான் கரோனா அதிகம் பரவும் தன்மை கொண்டது. தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் வென்டிலேட்டர்களில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று அமெரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார்.