இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நேற்று (21.10.2021) இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 100 கோடி தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் தொடக்கம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது,
“இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. கரோனா காலகட்டத்தில், மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தது. கரோனா தாக்கத்தால் துவண்டுவிடாமல் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்தினோம்.
விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தினோம். 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், எளிய மனிதர்களின் தயாரிப்புகளையும் வாங்குவதற்கான ஆர்வத்தை வளர்த்துள்ளோம்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி நேர்மறையாக கூறுகிறார்கள். இன்று, இந்திய நிறுவனங்களுக்கு சாதனை அளவிலான முதலீடுகள் வருவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.