இந்திய நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 75 பள்ளிகளுக்கு சென்று சுதந்திர தின வீரர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சுப்போட்டி, கண்காட்சி, மாணவர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது.
இதனையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், லபோர்த்தே வீதியில் உள்ள திருவள்ளுவர் பெண்கள் மேனிலைப்பள்ளி, ஆங்கிலோ அரசு நடுநிலை பள்ளிகளில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து விடுதலை வீரர்கள் குறித்து அறிந்து கொள்வது குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்திய திருநாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதம். அதனை அமல்படுத்த வேண்டும்" என்று தமிழிசை கூறினார்.