Skip to main content

பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட அப்பாவிகள்... AFSPA சட்டத்தை திரும்ப பெற வலுக்கும் கோரிக்கை!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

nagaland

 

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

 

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அதேநேரத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டத்திலான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என நாகாலாந்து முதல்வர் அறிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள நாகாலாந்து காவல்துறை, 'பாதுகாப்புப் படையினரின் நோக்கம் பொதுமக்களைக் கொலை செய்வதும் காயப்படுத்துவதுமே என்பது வெளிப்படை' என தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்தநிலையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, "நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசினேன். அவர் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளோம். நாகாலாந்திலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்குமாறு மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தச் சட்டம் நம் நாட்டின் பிம்பத்தைக் கெடுத்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

 

இதற்கிடையே மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையைத் தனிப்பட்ட முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கொண்டு செல்லப்போவதாகவும் கூறியுள்ளார்.

 

அதேபோல் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கை மீறுவதாக தாங்கள் கருதும் நபர்கள் மீது முன் அனுமதியின்றி தாக்குதல் நடத்தும் அதிகாரத்தைப் பாதுகாப்புப் படைகளுக்கு இச்சட்டம் வழங்குகிறது. இந்தச் சட்டம் நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் அமலில் இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம்; பயந்ததா பாஜக? 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Elections also unface Manipur; Why bjp afraid?

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் அந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  மேகாலயாவில் இரண்டு தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே மணிப்பூரில் நிகழ்ந்த கலவரம் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த நிலையில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் போட்டியிடாமல் மாநில கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி இந்த தகவலை பகிர்வதாக வடகிழக்கு மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி வந்து சேரவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில்  பயம் காரணமாக தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம் காட்டியுள்ளார் மோடி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story

“உணவு பழக்கத்தை வைத்து மக்களை கொச்சைப்படுத்தக் கூடாது” - நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Nagaland Governor L. Ganesan criticized Rs.Bharathi

 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ். பாரதிக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, “ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்து போடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறார். நாகலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அவரை ஊரை விட்டே விரட்டியடித்தனர்.  

 

நான் சொல்வதை தவறாக நினைக்கக் கூடாது. நாகலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள். நாய் கறி சாப்பிடுபவர்களே, இவ்வளவு சொரணை இருந்து இந்த ஆளுநரை விரட்டியடித்தார்கள். அப்படி என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் எண்ணி பார்க்க வேண்டும்” என்று பேசினார். இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. உணவு பழக்கத்தை வைத்து நாகலாந்து மக்களை கொச்சைப்படுத்தக்கூடாது. சாப்பிடும் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை வைத்து அவர்களின் குணாதிசயத்தை முடிவு பண்ணக்கூடாது. ஒட்டுமொத்த நாகலாந்து மக்களையும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் போல் சித்தரிப்பதா?. நாகலாந்து மக்களுக்கும், தமிழக மக்களுக்குமான இணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.