நபிகள் நாயகத்தைப் பற்றி கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. அதேபோல, மற்றொரு பாஜக நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் நபியை இழிவுபடுத்திப் பதிவு செய்தார். இதற்கு, இந்தியாவிலும், அரபு நாடுகளிலும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை முன்னெடுக்கும் வரை இந்த பிரச்சனை பூதாகரமானது. இதனையடுத்து நுபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நுபுர் சர்மாவை கண்டறிய முடியவில்லை என மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு இன்னும் எட்டு நாட்களே இருக்கும் நிலையில், இத்தகவலை மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். ரசா அகாடமியின் மும்பை பிரிவின் இணை செயலாளர் இர்பான் ஷேக் அளித்த புகாரின் பேரில் மே 29 அன்று நுபுர் சர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நுபுர் சர்மா மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல், பகைமையை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவரை காணவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளார். அதேநேரம்,, அவர் டெல்லி போலீஸின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் பத்திரமாக இருப்பதாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.