கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் இந்திய மாணவா் கூட்டமைப்பின் (எஸ்எஃப்ஐ) முன்னாள் நிர்வாகியான அனுபமா சந்திரன். இவரின் தந்தை ஜெயச்சந்திரன் வங்கி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் சிபிஎம் கட்சியிலும் முக்கியப் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில், அனுபமாவுக்கும் DYFI நிர்வாகியான அஜித்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அஜித்குமாருக்கு திருமணமாகி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அனுபமாவுடன் அஜித்துக்கு காதல் மலர்ந்தது. விவாகரத்து கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால், அஜித் விவாகரத்துப் பெறுவதற்கு முன்னர் அனுபமா கர்ப்பம் ஆகியுள்ளார்.
இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அனுபமா. குழந்தை சுமார் 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்துள்ளது. அஜித்குமாருடன் பழகி வருவதற்கு ஆரம்பத்தில் இருந்தே அனுபமாவின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. காரணம், அஜித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அனுபமா ஆதிக்க சாதியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனுபமா ஆண் குழந்தைக்கு தாயாகிவிட, அவரை சந்திக்க வந்தனர் அனுபமாவின் குடும்பத்தினர். சரியாக குழந்தை பிறந்த மூன்றாவது நாள், அனுபமா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சமயம் அது. அப்போது அனுபமாவை சந்தித்த அவரின் பெற்றோர், அன்பாகப் பேசி ஆறுதல் சொல்லியுள்ளனர்.
அனுபமாவிடம், "உனக்கு கல்யாண வயதில் ஒரு அக்கா இருக்கிறாள். நீ வீட்டில் இருந்தால் இந்தக் குழந்தையும் அங்குதான் வளரும்படி இருக்கும். இந்தக் குழந்தையைப் பார்க்கும் யாரும் உன் சகோதரியை கல்யாணம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள். நீ செய்த தவறால் அவளும் பாதிக்கும் நிலைமை ஏற்படக்கூடும். அதனால், சில காலம், உன் நண்பர் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் தேவையற்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உன் சகோதரியின் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் குழந்தையைக் கொண்டுவந்து உன்னிடமே ஒப்படைத்து விடுகிறோம்" எனக் கனிவான குரலில் கூறியுள்ளனர்.
இதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளாத அனுபமா குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும், அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக குழந்தையை அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து, அவரது பெற்றோருடன் தொடர்ந்து பேசிவந்த அனுபமா, 'என் குழந்தையை என்னிடமே கொடுத்துவிடுங்கள்' எனக் கூறியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர், 'உன் குழந்தை பத்திரமாக இருக்கிறது. அக்காவோட கல்யாணம் முடிந்ததும் கொண்டுவந்து தருகிறோம்' என நம்பிக்கை சொல்லியுள்ளனர். காலம் உருண்டோட, அனுபமாவின் அக்காவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. ஆனால், அக்காவின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அனுபமாவின் பெற்றோர், குழந்தையை கொடுப்பதாய் தெரியவில்லை.
குழந்தையைத் தன்னிடம் கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறிய அனுபமா, அஜித்துடன் வசித்திருக்கிறார். இந்நிலையில், குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி, அருகில் உள்ள பேரூர்கடை காவல் நிலையத்தில் அனுபமா புகார் அளித்தார். அனால், புகார் குறித்த எந்த நடவடிக்கை இல்லை. சுமார் ஆறு மாதங்களாக அதிகாரிகள் தொடங்கி முதல்வர் வரை பலரிடமும் மனு கொடுத்துள்ளார். அதிலும், எந்தப் பலனும் இல்லை. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில், மீடியாவின் கதவுகளை தட்டினார் அனுபமா. மீடியாவில் அனுபமாவை பற்றிய செய்திகள் வெளிவந்ததும், அனுபமாவின் போராட்டம் வெளி உலகிற்குத் தெரியவந்தது.
இதையடுத்து, அனுபமாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவர்களை கைது செய்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றதும் போலீசும் தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போதுதான், அனுபமாவின் பெற்றோர், மாநில அரசின் மையத்தில் குழந்தையைத் தத்துக் கொடுப்பதற்காக ஒப்படைத்தது தெரியவந்தது. இதனிடையே, ஆந்திராவில் உள்ள ஒரு தம்பதிக்கு அனுபமாவின் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது. உடனே, ஆந்திரா விரைந்த கேரள போலீசார், குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீட்டுக் கொண்டு வந்தனர்.
பின்னர், அனுபமா, அஜித் மற்றும் குழந்தை ஆகியோரது டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்தக் குழந்தை அனுபமா மற்றும் அஜித்துக்கு பிறந்த குழந்தைதான் என்பது உறுதியானது. இதன்பிறகு, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க இருப்பதாக குழந்தைகள் நலக் குழுவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதன்படி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது அனுபமாவின் குழந்தை. பிறகு, அனுபமா-அஜித் தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம், அனுபமா நடத்திவந்த ஒரு ஆண்டு பாசப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.