Skip to main content

"மத்திய உள்துறை இணையமைச்சர் வங்கதேசத்தை சேர்ந்தவர்" - அதிர்ச்சியளித்த பாஜக பொதுச்செயலாளர்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

nisith pramanik

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்கத்தில் நிஷித் ப்ரமாணிக் என்பவருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தில் பிறந்தவர் எனக்கூறும் ஃபேஸ்புக் பதிவு வைரலானது.

 

அதனையத்தொடர்ந்து, நிஷித் ப்ரமாணிக் பிறந்த இடம் தொடர்பான செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இதனையடுத்து, நிஷித் ப்ரமாணிக்கின் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அந்த ஊடக செய்திகளைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ரிபுன் போரா, பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

மாநிலங்களவை எம்.பி. ரிபுன் போரா அந்த கடிதத்தில், "ஊடக தகவல்களின்படி, நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தின் காய்பாந்தா மாவட்டம் ஹரிநாத்பூரில் பிறந்துள்ளார். கணினி பாடம் படிக்க மேற்கு வங்கம் வந்த அவர், அதில் பட்டம் பெற்ற பின், திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். பிறகு பாஜகவில் இணைந்த அவர், கூச்பிஹார் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆவணங்களில் தனது முகவரியை முறைகேடு செய்து கூச்பிஹார் என குறிப்பிட்டுள்ளார். நிஷித் ப்ரமாணிக் இணையமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு வங்கதேசத்தில் உள்ள அவரின் சகோதரர் உள்பட அவரின் பூர்விக கிராமத்தைச் சேர்ந்த சிலர் மகிழ்ச்சி தெரிவித்த காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், இது தீவிரமான விவகாரமாகும், ஏனெனில் வேற்றுநாட்டவர் ஒருவர், மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி ஒட்டுமொத்த சந்தேகத்தையும் தீர்க்கவேண்டும்" என அவர் கூறியிருந்தார்.

 

இதனால் இந்த சர்ச்சை தற்போது பெரிதாகியுள்ளது. அதேநேரத்தில், "நிஷித் ப்ரமாணிக் இணையமைச்சராகப் பதவியேற்றதை அவரின் உறவினர்கள் வேறு நாட்டிலிருந்து கொண்டாடினால் அதற்கு அவர் என்ன செய்வார்?" என நிஷித் ப்ரமாணிக்கின் நெருங்கிய வட்டாரங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

 

இதற்கிடையே மேற்கு வங்க பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு, நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்திலிருந்து அகதியாக வந்தவர் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "கோடிக்கணக்கான மக்களைப் போலவே நிஷித் ப்ரமாணிக், வங்கதேசத்திலிருந்து அகதியாக வந்தவர்தான். குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது வங்கதேச அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குகிறது. பிறகு ஏன் இந்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இன்னும் விதிமுறைகள் வகுக்கப்படாத நிலையில், அந்த சட்டத்தின் கீழ் நிஷித் ப்ரமாணிக் எவ்வாறு குடியுரிமை பெற்றார் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

India is second in the list of US citizens!

 

நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்ற வெளிநாட்டினரின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 

 

கடந்த மாதம் ஜூன் 15- ஆம் தேதி வரை 6,61,500 வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. குடியுரிமைப் பெற்றவர்களில் மெக்சிகோ முதலிடம் பெற்ற நிலையில், அதற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 12,928 பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். குடியுரிமைப் பெறும் வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிலிப்பைன்ஸ், கியூபா நாடுகள் உள்ளன. 

 

Next Story

வெளிநாடுகளில் இருந்து நிதிப் பெறும் கட்டுப்பாடுகளில் தளர்வு! 

Published on 03/07/2022 | Edited on 03/07/2022

 

Relaxation of restrictions on receiving funds from abroad!

 

வெளிநாடுகளில் இருந்து நிதிப் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதிப் பெறும் வகையில், விதிகளில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது.  

 

வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களிடம் இருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே அரசின் அனுமதியின்றி, நிதிப் பெறமுடியும் என்ற விதி இருந்தது. தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதிப் பெறும் வகையில், வெளிநாட்டு நிதி ஒழுங்காற்றுச் சட்ட விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களையே செய்துள்ளது.

 

இதைவிட, கூடுதலாகத் தொகையைப் பெறுவதாக இருந்தால்,  அரசுக்கு 90 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தன்னார்வ அமைப்புகளுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து நிதிப் பெறும் தன்னார்வ அமைப்புகள், தங்கள் வங்கிக் கணக்கு விவரத்தை 45 நாட்களுக்கும் முன்பே உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.