பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்கத்தில் நிஷித் ப்ரமாணிக் என்பவருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தில் பிறந்தவர் எனக்கூறும் ஃபேஸ்புக் பதிவு வைரலானது.
அதனையத்தொடர்ந்து, நிஷித் ப்ரமாணிக் பிறந்த இடம் தொடர்பான செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இதனையடுத்து, நிஷித் ப்ரமாணிக்கின் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அந்த ஊடக செய்திகளைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ரிபுன் போரா, பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி. ரிபுன் போரா அந்த கடிதத்தில், "ஊடக தகவல்களின்படி, நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தின் காய்பாந்தா மாவட்டம் ஹரிநாத்பூரில் பிறந்துள்ளார். கணினி பாடம் படிக்க மேற்கு வங்கம் வந்த அவர், அதில் பட்டம் பெற்ற பின், திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். பிறகு பாஜகவில் இணைந்த அவர், கூச்பிஹார் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆவணங்களில் தனது முகவரியை முறைகேடு செய்து கூச்பிஹார் என குறிப்பிட்டுள்ளார். நிஷித் ப்ரமாணிக் இணையமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு வங்கதேசத்தில் உள்ள அவரின் சகோதரர் உள்பட அவரின் பூர்விக கிராமத்தைச் சேர்ந்த சிலர் மகிழ்ச்சி தெரிவித்த காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், இது தீவிரமான விவகாரமாகும், ஏனெனில் வேற்றுநாட்டவர் ஒருவர், மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி ஒட்டுமொத்த சந்தேகத்தையும் தீர்க்கவேண்டும்" என அவர் கூறியிருந்தார்.
இதனால் இந்த சர்ச்சை தற்போது பெரிதாகியுள்ளது. அதேநேரத்தில், "நிஷித் ப்ரமாணிக் இணையமைச்சராகப் பதவியேற்றதை அவரின் உறவினர்கள் வேறு நாட்டிலிருந்து கொண்டாடினால் அதற்கு அவர் என்ன செய்வார்?" என நிஷித் ப்ரமாணிக்கின் நெருங்கிய வட்டாரங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
இதற்கிடையே மேற்கு வங்க பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு, நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்திலிருந்து அகதியாக வந்தவர் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "கோடிக்கணக்கான மக்களைப் போலவே நிஷித் ப்ரமாணிக், வங்கதேசத்திலிருந்து அகதியாக வந்தவர்தான். குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது வங்கதேச அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குகிறது. பிறகு ஏன் இந்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இன்னும் விதிமுறைகள் வகுக்கப்படாத நிலையில், அந்த சட்டத்தின் கீழ் நிஷித் ப்ரமாணிக் எவ்வாறு குடியுரிமை பெற்றார் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.