2021 - 22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் கரோனா தடுப்பூசிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் கோடியும் அடக்கம். இந்நிலையில் சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட் செயல்படுத்தல் குறித்த இணைய வழி கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி, கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தக் கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, “கரோனா தொற்று பரவல், வருங்காலத்தில் இதுபோன்ற சவால்களுக்கு எதிராக போராடத் தயாராக இருப்பதற்கான பாடத்தை நமக்கு கற்றுக்கொடுத்தது” எனக் கூறியள்ளார். கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி பேசியது வருமாறு:
இப்போது சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் அற்புதமானது. இது இந்தத் துறை மீதான நமது பொறுப்பினைக் காட்டுகிறது. கரோனா தொற்றுநோய் பரவல், வருங்காலத்தில் இதுபோன்ற சவால்களுக்கு எதிராக போராடத் தயாராக இருப்பதற்கான பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. இன்று, இந்தியாவின் சுகாதாரத் துறை மீதான உலகின் நம்பிக்கை புதிய உச்சத்தில் உள்ளது. 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க, நோய்த் தடுப்பு, ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதாரம், சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற 4 முக்கிய விஷயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோம். 2025 ஆம் ஆண்டளவில் நாட்டிலிருந்து காசநோயை முழுமையாக அகற்றுவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மத்திய அரசு சுகாதாரத்துறையில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், தொலைதூர பகுதிகளிலும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்கிறது. சுகாதாரத்துறையில் முதலீடு செய்வது மூலம் வேலைவாய்ப்புகளைக் கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி, கருத்தரங்கில் உரையாற்றினார்.