Skip to main content

கரோனா பரவல்: அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய பிரதமர் மோடி!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

modi

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்தநிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதனால் மரணங்கள் ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இன்று (16.04.2021) நாட்டில் ஆக்சிஜன் விநியோகத்தைப் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.

 

அதில், ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் கொள்ளளவைப் பொறுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பை அதிகப்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஆக்சிஜனைக் கொண்டுசெல்லும் டேங்கர்கள், எந்தத் தடையும் இல்லாமல் சென்று வருவதை உறுதிப்படுத்துமாறும் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆக்சிஜன் நிரப்பும் இடங்கள், உரிய கட்டுப்பாடுகளுடன் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், எஃகு ஆலைகளில் உபரியாக இருக்கும் ஆக்சிஜனை மருத்துவத் தேவைக்காக பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்