இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் அமலில் இருக்கும் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன. இந்தநிலையில் கரோனா ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் தனது கடிதத்தில், கவனமாக பரிசீலிக்கப்பட்ட பிறகே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. தொடர்ந்து "கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. களத்தில் உள்ள நிலையை மதிப்பிடுவதன் அடிப்படையிலயே, கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது தளர்த்துவது குறித்த முடிவு எடுக்கப்பட வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
"சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது, சந்தைகள் போன்ற இடங்களில், கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு வழிவகுத்தது" என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், அலட்சியம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை வேகப்படுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக்கொண்டுள்ளது.