திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த ஜூலை மாதம் டெல்லியில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களைr; சந்தித்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், இன்று (22.11.2021) மம்தா மீண்டும் டெல்லிக்குச் செல்லவுள்ளார். மூன்று நாட்கள் டெல்லியில் தங்கவுள்ள அவர், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். நேரம் ஒதுக்கப்படும் பட்சத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து, மாநில அரசுக்கான நிதி ஒதுக்கீடு, எல்லை பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மம்தா இந்தமுறை சோனியா காந்தியை சந்திப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. கடந்தமுறை டெல்லி சென்ற மம்தா, சோனியா காந்தியை சந்தித்தாலும், அதன்பிறகு மம்தாவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியை அவ்வப்போது விமர்சித்துவருகின்றனர். அதேபோல், காங்கிரஸ் தலைவர்களும் திரிணாமூல் காங்கிரஸ்ஸையும் மம்தாவையும் விமர்சித்துவருகின்றனர். இதனால் மம்தா சோனியாவை சந்திப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பிவரும் பாஜக எம்.பி. வருண் காந்தி, டெல்லியில் மம்தா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.