Skip to main content

சபாநாயகரின் அதிகாரத்தை பறித்த ஆளுநர் - திட்டமிட்டபடி மம்தா பதவியேற்பதில் சிக்கல்!

Published on 05/10/2021 | Edited on 06/10/2021

 

mamata banerjee

 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவைத் தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தின் பவானிப்பூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தியது.

 

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், எதிர்பார்க்கப்பட்டது போலவே மம்தா பெரும் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் விரைவில் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது இடைத்தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே மேற்கு வங்க ஆளுநர், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரத்தை  சபாநாயகரிடம் இருந்து  பறித்துள்ளார்.

 

இதனால் மேற்கு வங்க சபாநாயகரால் மம்தா பானர்ஜிக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது. இதனையடுத்து மேற்குவங்க சபாநாயகர், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை தனக்கு வழங்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மேற்கு வங்க ஆளுநரோ, பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து கெசட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே சபாநாயகருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

 

வரும் 7ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக மம்தா பதவியேற்க திட்டமிட்டுள்ள நிலையில், கெசட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படும் என்ற ஆளுநரின் அறிவிப்பால் மம்தா பானர்ஜி பதிவியேற்பு திட்டமிட்டப்படி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சபாநாயகருக்குப் பதிலாக மம்தாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு திரிணாமூல் அழைப்பு விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்