இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கடந்த மே ஒன்று முதல் 18 - 44 வயதானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவும், மாநிலங்கள் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசி வாங்கவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து, தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஒரு விலையையும், மாநில அரசுக்கு ஒரு விலையையும், தனியாருக்கு ஒரு விலையையும் நிர்ணயித்துள்ளன.
இந்தநிலையில், கரோனா காலத்தில் மக்களுக்கு ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவற்றை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது, தடுப்பூசி விலையைத் தடுப்பூசி நிறுவனங்களே நிர்ணயிக்க அனுமதிக்க முடியாது எனவும், மத்திய அரசு தடுப்பூசி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இதன்தொடர்ச்சியாக, இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்தநிலையில், மேற்குவங்க அரசு, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் மேற்கு வங்க அரசு, பொதுவான கரோனா தடுப்பூசி கொள்கை வேண்டுமென்றும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாருக்குத் தனித் தனி விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. மேலும் மேற்கு வங்க அரசு அந்த மனுவில், கரோனா தடுப்பூசி மாநிலங்களுக்கு இலவசமாக தரப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மம்தா பானர்ஜி ஏற்கனவே, இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நீதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.