இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தாவும், பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் திரட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக டெல்லிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமும் அவர் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜியிடம், 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாக இருப்பீர்களா எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் அரசியல் ஜோதிடர் அல்ல. இது சூழ்நிலையைப் பொறுத்தது. வேறு யாராவது தலைமை தாங்கினாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதுகுறித்து விவாதிக்கப்படும்போது தலைமை குறித்து முடிவெடுக்கலாம்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "பூனைக்கு மணி கட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உதவ விரும்புகிறேன். நான் தலைவராக விரும்பவில்லை. எளிய தொண்டராக இருக்க விரும்புகிறேன்" எனவும் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி இன்று சோனியா காந்தியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.