Skip to main content

அவருக்கு படுக்கை கொடுங்கள்; இல்லையென்றால் ஊசிபோட்டு கொன்றுவிடுங்கள் - தந்தைக்காக கதறிய மகன்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

sagar kishor

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதனால் மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க படுக்கை வசதியில்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வெளியேயே சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

 

இவ்வாறு சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவரின் மகன், ‘படுக்கையைத் தாருங்கள் அல்லது தந்தையைக் கொன்றுவிடுங்கள்’ என கதறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் கிஷோர் நஹர்ஷெடிவர் என்பவரின் தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சாகர் கிஷோர், தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார். ஆனால் பல மருத்துவமனைகளுக்குச் சென்றும், படுக்கை வசதி இல்லாததால் அவரது தந்தைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர், தந்தையை தெலங்கானாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் மருத்துவமனைகளில் இடமில்லை.

 

இதனையடுத்து அவர், தனது தந்தையை அழைத்துக்கொண்டு மஹாராஷ்ட்ராவிற்கே திரும்பியுள்ளார். அப்போதும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. 24 மணி நேரத்திற்குள் இரண்டு மாநிலங்கள் சுற்றியும் அவரது தந்தைக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத நிலையில், ஆம்புலன்ஸில் அவரது தந்தைக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த ஆக்சிஜன் அளவும் குறைந்துகொண்டே வந்துள்ளது.

 

இந்தநிலையில், மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த அவரிடம் ஊடகம் ஒன்று பேசியுள்ளது. அப்போது அவர் "அவருக்குப் படுக்கை ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் அல்லது ஊசி போட்டுக் கொன்றுவிடுங்கள். என்னால் அவரை இந்த நிலைமையில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இயலாது. உங்களிடம் படுக்கைகளும் இல்லை" என தெரிவித்தார். அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருவதோடு, பலரையும் உலுக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.