இந்தியாவில் கரோனா பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழு ஊடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மஹாராஷ்ட்ராவிலும் கரோனவைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 15ஆம் தேதிவரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்த ஊரடங்கு மற்றும் பிற நடவடிக்கைகளின் காரணமாக, அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. தினமும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியான நிலை மாறி, தற்போது தினசரி கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. நேற்று (12.05.2021) அம்மாநிலத்தில் 46,781 பேருக்கே கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம், தற்போது நிலவும் கரோனா கட்டுப்பாடுகளை ஜூன் 1ஆம் தேதி காலை 7 மணிவரை நீட்டித்துள்ளது. அதுமட்டுமின்றி மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்குள் வருபவர்கள், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து நெகடிவ் சான்றிதழுடன் வர வேண்டும் எனவும் அம்மாநில அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.