இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கும் மஹாராஷ்ட்ரா, சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளுக்கும் இடையே உரசல் உண்டாகியுள்ளது. நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மஹாராஷ்ட்ரா, சத்தீஸ்கர் மாநில அரசுகளை விமர்சித்தார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து மகாராஷ்டிராவில் மக்கள் பிரதிநிதிகள் கூறியிருப்பதைப் பார்த்தேன். அது தொற்று நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதில், மஹாராஷ்டிரா அரசின் தொடர் தோல்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியே தவிர வேறில்லை. தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. மஹாராஷ்ட்ராவின் குறைபாடுள்ள அணுகுமுறை, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முயற்சிகளைத் தடுக்கிறது'' என விமர்சித்தார்.
தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் குறித்து பேசிய அவர், "சத்தீஸ்கர், கடந்த 2-3 வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கண்டுள்ளது. அவசரப் பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும் சத்தீஸ்கர் அரசு கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த மறுத்துவிட்டது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்தநிலையில் தடுப்பூசி பற்றாக்குறையால், மஹாராஷ்ட்ரா முழுவதும் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக மஹாராஷ்ட்ரா தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், "மத்திய அரசின் புதிய தடுப்பூசி வழங்கும் உத்தரவின்படி, மஹாராஷ்ட்ராவுக்கு 7.5 லட்சம் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு மஹாராஷ்ட்ராவை விட அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார். இதனை சரிசெய்வதாகக் சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்ததாகவும், அதற்கு இன்னும் காத்திருப்பதாகவும் மஹாராஷ்ட்ர சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். மேலும் மத்திய அரசு ஏன் மஹாராஷ்ட்ராவுக்கு பாகுபாடு காட்டுகிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், "மஹாராஷ்ட்ராவின் மக்கள் தொகை, குஜராத்தின் மக்கள்தொகையை விட இரு மடங்காக உள்ளது. குஜராத்திற்கு ஒரு கோடி டோஸ் கிடைத்தால், எங்களுக்கும் ஒருகோடி டோஸ் கிடைக்கிறது" என அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் தங்களுக்கு மாதம், 1.6 கோடி தடுப்பூசி வேண்டுமென தெரிவித்தார்.
மஹாராஷ்ட்ராவை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குப் பதிலடி தந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர், "கோவாக்சின் ஆய்வகப் பரிசோதனையில் இருந்தபோது அதனை நாங்கள் நிறுத்தினோம். அது சேமிக்கப்பட்டு வந்தது. எங்களிடம் கோவிஷீல்ட் சேமிப்பும் இருந்தது. ஆய்வகப் பரிசோதனை முடிந்ததிலிருந்து, சத்தீஸ்கரில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது அவருக்குத் தெரியவில்லை என்றால் அது துரதிருஷ்டமானது" எனக் கூறியுள்ளார்.