2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனையொட்டி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை மம்தா சந்தித்தார். இதனால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் இரு கட்சிகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இதனால் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து தேர்தலைச் சந்திக்குமா என கேள்வியெழுந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று (01.12.2021) மும்பையில் சரத் பவாரை சந்தித்த மம்தா, "நடந்துகொண்டிருக்கும் பாசிசத்திற்கு எதிராக யாரும் போராடவில்லை. எனவே வலிமையான மாற்றுப்போக்கை உருவாக்க வேண்டும். சரத் பவார் மூத்த தலைவர். அவர் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை" என கூறினார்.
இது மம்தா, மூன்றாவது அணி அமைக்க முயல்வதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மம்தாவுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, "ஒட்டுமொத்த இந்தியாவும் 'மம்தா, மம்தா' என்று கோஷமிட ஆரம்பித்துவிட்டதாக அவர் நினைக்கிறார். ஆனால் இந்தியா என்பது மேற்கு வங்கம் மட்டுமல்ல. மேற்கு வங்கம் மட்டும் இந்தியா அல்ல. இன்று அவருக்குப் பின்னால் மோடி நிற்பதால் அவரது பலம் அதிகரித்துள்ளது. எனவே, காங்கிரசைப் பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார். பாஜக இந்தியா முழுவதும் போராடிக்கொண்டிருக்கும்போது அவர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு ஆக்சிஜனை வழங்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். மம்தா பானர்ஜி பாஜகவின் ஆக்சிஜன் சப்ளையர் ஆகிவிட்டார்" என விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைமையை விமர்சித்துள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும், வெளியும் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சி 90%க்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியடைந்துள்ள நிலையில், காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல. எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும்" என கூறியுள்ளார். மம்தாவின் பிரதமர் கனவை வெளிக்காட்டும் வகையில் இந்தப் பதிவு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.