Skip to main content

அமெரிக்காவில் எதிரொலித்த லக்கிம்பூர் சம்பவம்; பதிலளித்த நிர்மலா சீதாராமன்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

nirmala sitharaman

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும், நேற்று (12.10.2021) உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவுடன் சேர்த்து இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் சரணடைய விரும்புவதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்றத்திலும் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து கேள்வியெழுப்பட்டுள்ளது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஹார்வர்ட் கென்னடி ஸ்கூலில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமனிடம், லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்து பிரதமரோ, மூத்த அமைச்சர்களோ எதுவும் கூறாது ஏன் எனவும், யாராவது இதுகுறித்து கேள்விகேட்டால் ஏன் தற்காத்துக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என கேள்வியெழுப்பப்பட்டது.

 

udanpirape

 

அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது; இல்லை..கண்டிப்பாக இல்லை. முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒரு சம்பவத்தை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுதான் எனது கவலை.

 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெறுகின்றன. நீங்களும், டாக்டர் அமர்த்தியா சென் உள்ளிட்ட மற்றவர்களும், இந்தியாவை அறிந்தவர்களும் பாஜக சம்மந்தப்பட்டுள்ளபோது மட்டும் அந்த பிரச்சனைகளை எழுப்பாமல், பிரச்சனைகள் நடக்கும் ஒவ்வொரு முறையும் அதை எழுப்ப வேண்டும் என விரும்புகிறேன். எனது அமைச்சரவை சகாவின் மகன் அநேகமாகப் பிரச்சனையில் இருக்கக்கூடும். அவர்கள்தான் (மத்திய இணையமைச்சரின் மகன் உள்ளிட்டோர்) அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், வேறு யாரும் அதைச் செய்யவில்லை எனக் கருதப்படுகிறது. அதை நிறுவச் சட்டம் ஒரு முழுமையான விசாரணை செயல்முறையைக் கொண்டிருக்கும்.

 

இது எனது கட்சி அல்லது பிரதமரைப் பாதுகாக்கச் சொல்லவில்லை. இந்தியாவின் தற்காப்புக்காகக் கூறுகிறேன். நான் இந்தியாவிற்காகப் பேசுவேன். ஏழைகளுக்கு நீதி கிடைக்கப் பேசுவேன். நான் அதைக் கேலி செய்யமாட்டேன் . நான் கேலி செய்தேன் என்றால், "உண்மைகளைப் பேசுவோம்" எனத் தற்காப்புக்காக கூறியிருப்பேன். இதுதான் உங்களுக்கு என்னுடைய பதில். 

 

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.