இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவர் மருந்துகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலமை மோசமாக இருப்பதையடுத்து,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி உதவி வருகின்றன.
இந்தநிலையில் கேரளா, தங்களுக்கு வாரதிற்கு ஒருமுறை ஆக்சிஜன் தருமாறு இஸ்ரோ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரளாவின் தலைமை செயலாளர், இஸ்ரோவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், "மஹேந்திர கிரியில் உள்ள இஸ்ரோவின் புரோபல்ஷன் வளாகத்திலிருந்து திரவ ஆக்சிஜனை தருவதற்கு இஸ்ரோ எடுத்துள்ள முடிவு, கரோனாவை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு பெரிய அளவில் உதவும்" என கூறியுள்ளார்.
மேலும் அவர் அந்த கடிதத்தில், "கேரளாவில் சமீப காலமாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சைக்கு தேவையான திரவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. மாநில அரசு, மாநிலத்திற்குள்ளயே திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றாலும், ஏற்கனவே இருக்கும் திறனை உடனடியாக பெருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இஸ்ரோ மே முதல் வாரம் முதல், வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கேரளாவிற்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.