சவர்மா சாப்பிட்ட கேரளாவின் காசர்கோடுப் பகுதியைச் சேர்ந்த மாணவி தேவநந்தா பலியானதையடுத்து கேரள மாநில உணவுத்துறை ஹோட்டல்கள் சிற்றுண்டி மால்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன் நுகர்வோர் மாநிலமான கேரளாவுக்கு அண்டை மாநிலம் உள்பட பிறபகுதிகளிலிருந்து வருகிற இறைச்சி, மற்றும் உணவுப் பொருட்களைச் சோதனையிட்டு வருகிறது.
தற்போது கடல் மீன்களின் இன விருத்திக்காக கேரளாவில் மீன் பிடிதடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கேரள தேவையின் மீன்கள் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்து டன் கணக்கில் செல்லுகின்றன. விலையும் ஓரளவு லாபம் கிடைப்பதால் மீன் லோடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிற சூரைமீனுக்கு கடும் கிராக்கி. கேரளாவிலிருப்பதால் அது அட்டியில்லாமல் நாட்கள் தோறும் கொண்டு செல்லப்படுகின்றன. இப்படி விற்பனைக்காக, ஹோட்டல்களுக்காகக் கொண்டு செல்லப்படுகிற மீன்களில் நாட்பட்ட மீன்களும் ஐஸ்கட்டிகளில் பதப்படுத்தப்பட்டு கொண்டு செல்வதும் உண்டாம்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தின் கடலூரிலிருந்து 10க்கும் மேற்பட்ட மீன் கன்டெய்னர் லாரிகள் தமிழகத்தின் தென்காசி மாவட்ட புளியரைப் பகுதி வழியாக கேரளாவுக்குச் சென்றன. கேரளாவின் எல்லையான கோட்டைவாசல் ஆரியங்காவுப் பகுதிக்குள் நுழைந்த லாரிகளை கேரளாவின் சாத்தனூர் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுஜித் பெரேரா தலைமையில் கொட்டாரக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி நாயர், பத்னாபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் நிஷா ராணி மற்றும் மீன் வளத்துறை அதிகாரி ஷான் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லைக்குள் நுழைந்த 10க்கும் மேற்பட்ட மீன் கன்டெய்னர் லாரிகளை மறித்து சோதனை நடத்தினர். இதில் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 10,750 கிலோ (10டன்னிற்கும் மேற்பட்ட) மீன்கள் ஐஸ் கட்டியில் வைத்திருந்ததில் கெட்டுப் போய் வீச்சமெடுத்ததை அறிந்தவர்கள் அந்த மூன்று லாரிகள் உட்பட மீன்களைப் பறிமுதல் செய்தனர்.
இதிலுள்ள மீன்களின் சாம்பிளை சொச்சியிலுள்ள ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர். பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் மீன்களையும் கழுதுருட்டி ரப்பர் காடு பகுதியில் ஜே.சி.பி. மூலம் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன்களின் மதிப்பு சுமார் 28 லட்சம் என்கிறார்கள்.
இது குறித்து சாத்தனூர் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுஜித் பெரேரா, “இந்த மீன்கள் கெட்டுப் போனவைகள் அது தெரியாமலிருக்க ரசாயன திரவம் தடவப்பட்டு ஐஸ்கட்டிகளில் வைத்துக் கொண்டு வரப்பட்டன. இவைகள் கேரளாவின் கருநாகப்பள்ளி, ஆலங்கோடு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக விசாரணையில் தெரிகிறது. ஆய்வு முடிவுக்குப் பின்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.