தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், கோழிக்கோடுவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முதல்வருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, "கரோனா உறுதியான போதிலும், முதல்வர் பினராயி விஜயனுக்கு முக்கிய மருத்துவப் பிரச்சனை ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் ஏற்கனவே, கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் - 6 ஆம் தேதி முதலவர் பினராயி விஜயனின் மகளுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது அவரின் தந்தையும், முதல்வருமான பினராயி விஜயனுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.