இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக இருந்துவருகிறது. அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், அண்மையில் கேரள அரசு கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்தநிலையில் தற்போது, கரோனாவால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழே இருந்தால், அந்தக் குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே கரோனாவால் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தைத் தவிர்த்து இந்த மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சமூகநல திட்டங்களில் பயனடைந்துவந்தாலும், நலநிதி மற்றும் பிறவகையான ஓய்வூதியங்களைப் பெற்றுவந்தாலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த மாதம் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் வசிக்கும் வறுமைக்கு கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த நபர், கேரளாவிற்குள் உயிரிழந்திருந்தாலும், நாட்டின் வேறு பகுதிகளில் உயிரிழந்திருந்தாலும், இந்தியாவிற்கு வெளியே உயிரிழந்திருந்தாலும், அந்தக் குடும்பத்துக்கு இந்த மாதம் 5000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.