கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏக்களாக பதவி வகித்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, பா.ஜ.கவின் பசவராஜ் பொம்மை மற்றும் காங்கிரஸின் இ.துக்காராம் ஆகியோர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், சென்னபட்டணா தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த ஹெச்.டி.குமாரசாமி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அதன் பிறகு, அந்த மூன்று தொகுதிகளை காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவோடு, கர்நாடகாவில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மீது அதிருப்தியடைந்த யோகேஷ்வர், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சென்னபட்டனா தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில், பா.ஜ.க கூட்டணியில் உள்ள ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ஆகியோர் போட்டியிட்டார். அதே போல், சிக்காவி தொகுதியில் பா.ஜ.க சார்பில் பரத் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் பதான் யாசிர் அகமது கான் ஆகியோரும், சண்டூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக அன்னபூர்ணா துகாராம், பா.ஜ.க சார்பில் பங்காரு ஹனுமந்த் ஆகியோரும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், தற்போது எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிக்காவி தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பரத் பொம்மையை வீழ்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் பதான் யாசிர் அகமது கான் 1,00,756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல், சண்டூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா 93,616 வாக்குகள் பெற்று, பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்துள்ளார். சென்னபட்டனா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வர் 1,12,642 வாக்குகள் பெற்று, ஜனதா தளம் வேட்பாளர் நிகில் குமாரசாமியை வீழ்த்தியுள்ளார்.