Skip to main content

'சிலிண்டரிலிருந்து ஆக்சிஜன் பெறுவதற்கு பதிலாக மரங்களிலிருந்து ஆக்சிஜன்' - குஜராத் முதல்வர்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

gujarat cm

 

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அம்மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி அண்மையில் பதவி விலகினார். இதனையடுத்து, பூபேந்திர படேல் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதன்தொடர்ச்சியாக முற்றிலும் புதுமுகங்களைக் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

 

இந்தநிலையில், நேற்று (17.09.2021) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில அரசின் மரம் நடும் திட்டம் குறித்தும் பேசினார். அப்போது அவர், ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து ஆக்சிஜன் பெறுவதற்குப் பதிலாக, இயற்கையாக ஆக்சிஜன் பெறுவதற்காக மரங்கள் நடப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "மனித வாழ்வில் மரங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. உலகளாவிய கரோனா தொற்றுநோய் சுத்தமான ஆக்சிஜனின் முக்கியத்துவம் குறித்து நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜனைப் பெறுவதற்குப் பதிலாக, இயற்கையாக ஆக்சிஜனை வழங்கும் மரங்களை அதிகளவு நடுவதற்கு குஜராத்தில் மரம் நடும் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார். பூபேந்திர படேலின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கிண்டலுக்குள்ளாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் ஆக்ஸிஜன்; இஸ்ரோ தந்த தகவல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

ISRO informs that there is oxygen in the moon

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்த போது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS)  என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

 

இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இது தவிர நிலவில் ஆக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் லிப்ஸ் (LIPS) என்ற கருவி பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

ஆக்சிஜன் கையிருப்பு - ஆய்வு கூட்டம் நடத்திய மத்திய அமைச்சர்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

piyush goyal

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை கடுமையாக அதிகரித்திருந்தது. டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுபாடும் ஏற்பட்டது. முதல் அலையில் அதிகபட்சமாக ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 3095 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 9,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தசூழலில், தற்போது மீண்டும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பும் ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தநிலையில் மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவ ஆக்சிஜன் தயார்நிலை தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த, போதுமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பயனுள்ள வழிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.