இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது என இந்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிறன்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக்காரர்களுக்கும் அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வன்முறை மூண்டது. இந்தச் சூழலில், பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக மகிந்த ராஜபக்ஷே அறிவித்தார்.
இருப்பினும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலை சமாளிக்க இந்தியா படைகளை அனுப்ப வாய்ப்புள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் அதனை மறுத்துள்ளது.
அதே நேரத்தில் இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை, பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.