மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேசியா, கரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் அளவிற்கு நிலை மோசமாக இருக்கிறது.
மேலும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் அந்தநாட்டில் 49, 000 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் இந்தோனேசியாவிற்கு உதவும் வகையில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனையும் இந்தியா அந்தநாட்டிற்கு, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பலில் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் போது கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அப்போது இந்தியாவிற்கு 1400 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக இந்தோனேசியா அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.