கரோனா தொற்று பரவல் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள், வேறு நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இங்கிலாந்து அரசும் அவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.
இந்தநிலையில், இங்கிலாந்து அரசின் புதிய அறிவிப்பு ஒன்று இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்திகொண்டர்வர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டு 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்படும் என்றும் இங்கிலாந்து வெளியிட்ட அந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இங்கிலாந்தின் அறிவிப்பு பதிலடி தரும் வகையில், இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து நாட்டவர்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இங்கிலாந்து அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள இன்றைய தினத்தன்றே இங்கிலாந்து நாட்டவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.
இந்தியா அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து நாட்டவர்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும். மேலும் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு இந்தியா வந்தவுடன் ஒருமுறை கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர் இந்தியாவிற்கு வந்த 8வது நாளன்று மீண்டும் ஒருமுறை கரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
ஒருவேளை தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற அறிவிப்பை இங்கிலாந்து திரும்பப் பெற்றால், இந்தியாவும் இங்கிலாந்து நாட்டவருக்கான கட்டுப்பாடுகளைத் திரும்பப்பெறும் எனக் கூறப்படுகிறது.