இந்திய- நேபாள உறவு இமயமலையை போல அசைக்க முடியாதது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நேபாள பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நேபாளில் லும்பினி மாகாணத்திற்கு சென்று புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் ஷேர்பகதூர் துபாவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்த சமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காட்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் காத்மாண்டு பல்கலைக்கழகத்துக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தாகின.
முதுநிலை அளவில் கூட்டுப் பட்டப்படிப்பு திட்டத்திற்காக, இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மற்றும் காத்மாண்டு பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தத்திற்கான கூட்டு விருப்பக் கடிதம் வழங்கப்பட்டது. எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.