ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடைசி நாளான இன்றுடன் (15/05/2022) நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கடைசி நாளான இன்று (15/05/2022) கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "பிராந்தியங்களின் தொகுப்பு தான் இந்தியா என அரசியல் சாசனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா எந்த ஒரு தனி நபருக்கும், தனி கட்சிக்கும் சொந்தமான நாடு கிடையாது. பாகுபாடின்றி அனைவரின் கருத்துகளையும் காங்கிரஸ் கட்சி கேட்கும்; இதுதான் கட்சியின் டி.என்.ஏ. அரசியல் ரீதியாக கருத்துப் பகிர்வுகள் பெகாசஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி நசுக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு உள்ளிட்ட தவறான நடவடிக்கைகள் இளைஞர்களை வேலையில்லாமல் செய்துள்ளது.
கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தைக் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். மூத்த தலைவரோ, இளம் தலைவரோ கட்சியில் யாராக இருந்தாலும் மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும். வியர்வை சிந்தாமல் எதுவும் நடக்காது; மக்களிடம் செல்வது தான் இருக்கக் கூடிய ஒரே வழி. காங்கிரஸ் கட்சியில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். நிர்வாக ரீதியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சியும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.