கரோனா முழு ஊரடங்கு காலத்திலிருந்து தற்பொழுது வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பலதரப்பட்ட ஏழை மக்களுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். அநேகப் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் இவர் செய்த உதவிகளின் மூலம் பலதரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்று ஹீரோவானார். அண்மையில் அவர் தனது 10 கோடி மதிப்பிலான சொத்துகளை அடமானம் வைத்து, பலருக்கும் உதவிகளைச் செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி, மேலும் ஒரு ஸ்டெப், ரசிகர்கள் மனதில் ஏறி அமர்ந்தார் சோனு சூட். அவரது உதவும் மனப்பான்மையைப் பாராட்டும் விதமாக அவருக்கு சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது குடியிருப்பை, சட்டத்தை மீறி அவர் ஹோட்டலாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்தப் புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், "கரோனா காலத்தில் பொதுமக்கள், மருத்துவர்கள் உட்பட கரோனா முன்களப் பணியாளர்கள் தங்குவதற்கு ஹோட்டலாகப் பயன்படுத்தப்பட்டது. நான் ஒருபோதும் சட்டத்தை மீறுபவன் அல்ல. இதற்காக மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டுத்தான் பயன்படுத்தப்பட்டது. இந்தப் புகாருக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.