பள்ளி ஆசிரியரை, மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பக்ராய்ச் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ராஜேந்திர பிரசாந்த் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் மாணவர்கள் மொபைல் உபயோகிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.
இந்த நிலையில், ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, மொபைல் சத்தம் கேட்டுள்ளது. மாணவர்கள் மொபைல் பயன்படுத்திக் கொண்டிருந்ததை கண்டுபிடித்த ராஜேந்திர பிரசாத், அவர்களிடம் இருந்த மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளார்.
சில நாட்கள் கழித்து மொபைல் போன் பறிமுதல் செய்த காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கத்தோடு ஒரு மாணவர் மட்டும் பள்ளிக்கு கத்தி கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு, அந்த மாணவர் ஆசிரியர் ராஜேந்திர பிரசாத்தை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். அதன் பிறகு அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து ஆசிரியரின் குடும்பத்தினர், மாணவரைக் கைது செய்யக் கோரி கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாணவரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியரை, மாணவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.