அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்ச புகாரில் சிக்கும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வழக்கம். அப்படி நடத்தப்படும் சோதனையில் முறைகேடாகப் பதுக்கிவைக்கப்படும் பணம், சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்வதும் வழக்கம். சில நேரம் தீவிர சோதனையில் நூதன முறையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவரும். அப்படி நூதன முறையில் பணம் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம்தான் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான 65 க்கும் மேற்பட்ட இடங்களில் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கர்நாடக கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சாந்த கவுடா என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தனது வீட்டிலும் சோதனை நடைபெறலாம் என முன்னரே யூகித்திருந்த இளநிலை பொறியாளர் சாந்த கவுடா நூதனமான முறையில் பணத்தைப் பதுக்கிவைக்க முற்பட்டுள்ளார். வீட்டிலிருந்த முறைகேடான பணம் மற்றும் நகைகளைக் கழிவுநீர் குழாய் போன்று பைப் ஒன்றைப் போலியாக செட் செய்து அதற்குள் பதுக்கி வைத்துள்ளனர்.
இதை எப்படியோ மோப்பம் பிடித்த அதிகாரிகள் அந்த போலி கழிவுநீர் குழாயில் சோதனையிட்ட போது அதிலிருந்து 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பல கிலோ மதிப்பு கொண்ட நகைகள், ஆவணங்களைக் கைப்பற்றப்பற்றினர். இங்க பைப்பை திறந்தால் தண்ணீர் மட்டுமல்ல பணமும் கொட்டும் எனக் காட்டியுள்ளார் கர்நாடக பொதுப்பணித்துறை பொறியாளர்.