
பள்ளி பிரபலமடைய வேண்டும் என்பதற்காக பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக பெற்றோர்களுக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உடனடியாக பெற்றோர்களாக வந்தபோது பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகேல் சிறுவனை தூக்கிக்கொண்டு காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக காவல்துறையினருக்கு பெற்றோர் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகேலின் காரை பிடித்துச் சோதனையில் ஈடுபட்ட போது சிறுவன் உயிரிழந்த நிலையில் காரில் இருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தினேஷ் பாகேலிடம் விசாரணையில் ஈடுபட்ட பொழுது சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாருக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியின் இயக்குநரான தினேஷ் பாகேலின் தந்தை ஜசோதன் மாந்திரீகம் உள்ளிட்டவைகளில் நம்பிக்கை உள்ளவராக இருந்துள்ளார். பள்ளி பிரபலமடைய வேண்டும் என தினேஷ் பாகேல் புலம்பி வந்த நிலையில் 'உன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை நரபலி கொடுத்தால் பள்ளி பிரபலமடையும்' என தந்தை சொன்ன ஆலோசனையின்படி விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவனை நரபலி கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளியின் இயக்குனர் தினேஷ் பாகேல், அவருடைய தந்தை மற்றும் பள்ளியைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.