ஞானவாபி வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாமென வாரணாசி உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த நிலையில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றி, முகலாய மன்னர் ஒளரங்கசீப், இந்த மசூதியைக் கட்டியதாகவும், மசூதி அமைந்துள்ள இடம் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சொந்தமானது எனவும் வழக்கு தொடரபட்டது.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஆய்வுக்குழு அமைத்தது. இக்குழுவின் தகவல்கள் கசிந்தது சர்ச்சையான நிலையில், குழுவின் தலைவர் மாற்றப்பட்டார். இதையடுத்து அமைக்கப்பட்ட புதிய குழு அதன் அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஞானவாபியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் இடத்தை பாதுகாக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்மனுதாரர் கூறிய நிலையில், மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வசூகான சுவர் தொடர்பான வழக்கைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தால் அதுவரை வாரணாசி நீதிமன்ற வழக்கையும் ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாமென வாரணாசி உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.