டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பொழிந்ததன் காரணமாக, 40- க்கும் அதிகமான விமானங்கள் தாமதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், மணிக்கு 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, அதிகாலை 03.00 மணி முதல் பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பொழிந்தது. கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டனர்.
அந்த பகுதிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40- க்கு அதிகமான விமானங்கள், தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இன்று மாலையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.