Skip to main content

குஜராத் கலவர வழக்கு: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

gujarat incident case pm narendra modi supreme court judgement

 

கடந்த 2022- ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 

குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002- ஆம் ஆண்டு ரயில் எரிக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மற்றும் 63 உயரதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த புகாரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்தது.  

 

குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என 2012- ஆம் ஆண்டு சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

கடந்த 2017- ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜக்கியா ஜாஃப்ரி தரப்பில் 2018- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை நீதிபதிகள் கன்வில்கர் அமர்வில் நடைபெற்ற நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். 

 

இதையடுத்து, குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 63 அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்க்கும் மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

 

குஜராத் கலவர வழக்கில் மேல் விசாரணையும் தேவையில்லை எனக் கூறிய நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.  


சார்ந்த செய்திகள்