உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் இன்று (17/09/2021) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவது, பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதைத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்தன. நிதி நெருக்கடியைச் சந்தித்ததால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர மாநிலங்கள் எதிர்த்தன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்தால் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறினர்.
கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சில முக்கிய மருந்துகள், கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரிச் சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 11 வகை கரோனா மருந்துகளுக்கான வரிச் சலுகையை டிசம்பர் மாதம் 31- ஆம் தேதி வரை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டது. ரூபாய் 16 கோடி மதிப்புள்ள உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பால் தேங்காய் எண்ணெய்க்கு இரண்டு விதமான வரி விதிக்கும் முயற்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டுக்குப் பிறகு டிசம்பர் மாதம் 18- ஆம் தேதிக்குப் பின் காணொளியில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், 20 மாதங்களுக்குப் பிறகு இன்று (17/09/2021) நேரடியாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.