மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நாளை மறுநாள் (17.09) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஃபிட்மென்ட் கமிட்டி, செயலி அடிப்படையாக கொண்ட ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்க முன்மொழிந்திருப்பதாகவும், இதுகுறித்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை செயலி அடிப்படையாக கொண்ட ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மீது ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டால், ஸ்விக்கி மற்றும் ஸொமேட்டோ நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்த நேரிடும். இந்த ஜி.எஸ்.டி பொதுமக்களிடம் இருந்தே வசூலிக்கப்படும் என்பதால், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவு பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.