![mamata](http://image.nakkheeran.in/cdn/farfuture/bQVRIAO8j-E9ifAJPGctPR7wtVxoEwBQggE5ShJzMJY/1633500605/sites/default/files/inline-images/cweg_0.jpg)
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவை தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், பவானிப்பூர் உட்பட மூன்று தொகுதிகளில் தேர்தலை நடத்தியது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், எதிர்பார்க்கப்பட்டது போலவே மம்தா பவானிப்பூரில் பெரும் வெற்றிபெற்றார். இதனையடுத்து அவர் விரைவில் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இடைத்தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே மேற்கு வங்க ஆளுநர், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரத்தை சபாநாயகரிடம் இருந்து பறித்ததால், அவர் மம்தா பானர்ஜிக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து மேற்கு வங்க சபாநாயகர், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை தனக்கு வழங்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால் மேற்கு வங்க ஆளுநரோ, பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து கெசட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே சபாநாயகருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்போவதாக தெரிவித்தார். ஏற்கனவே நாளை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க மம்தா திட்டமிட்டிருந்த நிலையில், ஆளுநரின் முடிவால் திட்டமிட்டபடி பதவியேற்பு விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்தநிலையில் மேற்கு வங்க ஆளுநர் தனது முடிவை திடீரென மாற்றிக்கொண்டுள்ளார். மம்தா பானர்ஜி உள்பட மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்களுக்கு நாளை மதியம் 2 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முன்வந்துள்ளார். பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிலையில், மேற்கு வங்க ஆளுநர் நேரடியாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.