இந்தியாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவத் தொடங்கியது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டு, சர்வதேச பயணிகளின் விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இருப்பினும், சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக அதிகரித்தபோதிலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது. சில குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டவுடன், வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கான அனைத்து வகையான விசாக்கள் வழங்கும் பணிகளும் நிறுத்தப்பட்டன. கரோனா பரவல் குறைய தொடங்கியவுடன், சுற்றுலா விசாவைத் தவிர, இதர வகை விசாக்கள் மட்டும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டன. அதே சமயத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வராததால், சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுற்றுலாவைச் சார்ந்த ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றின் வருவாய் பாதிக்கப்பட்டது. சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற பலர் வேலை இழந்தனர்.
இந்தச் சூழலில் இந்தியாவில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியைக் கடந்தது. அதேபோல், வெளிநாடுகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (07/10/2021) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், "முதற்கட்டமாக, தனி விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் இந்தியா வர அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வருகிற அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து இந்தியாவுக்கு வரலாம். அவர்களுக்குப் புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும். அத்துடன், தனி விமானம் அல்லாமல், வழக்கமான விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும். வெளிநாட்டு பயணிகள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருகிற காரணத்தால், தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு வந்து கொண்டாடக் காத்திருக்கும் வெளிநாட்டினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பால், இந்தியாவில் சுற்றுலாத்துறை மீண்டெழும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஒன்றரை ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை, வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொருளாதார ரீதியிலாக இந்திய விமான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சர்வதேச விமான சேவையைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.