உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று இராண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஒன்பது மாவட்டத்தை சேர்ந்த 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைப்பெற்றது. அதேபோல் 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டிற்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவிற்கும் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் கோவா மாநிலத்தில் அதிக சதவீதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தில் 79.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரகாண்டில் 64.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 64.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே கோவாவில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவா மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், “ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய எதிர்ப்பு அலை உள்ளது. அதனால்தான் இந்தளவிற்கு அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என நினைக்கிறேன். நாங்கள் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவோம் ” என தெரிவித்துள்ளார்