புதுச்சேரியில் மிஷன் வீதி, காந்தி வீதி, ரங்கப்பிள்ளை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷவர்மா சிக்கன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 60 கடைகளுக்கும் மேல் சோதனை நடைபெற்றது. அதில் 10 கடைகளில் சிக்கன் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு வகைகளை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் பாலகிருஷ்ணன், “கேரளாவில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரியில் ஷவர்மா கடைகளில் கடந்த 3 நாட்களாக சோதனை செய்து வருகிறோம். புதுச்சேரியில் இதுவரை எந்தவிதமான புகாரும் வரவில்லை. இதில் 60-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தபோது, அதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்து உணவு கெட்டுப் போயிருந்தால் அந்த கடையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு பொருட்களை விற்பனை செய்தால் அந்த கடைக்கு 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.