இந்தியாவின் பிரபல இணையதள பொருட்கள் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட், தற்போது அதானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. தனது உற்பத்தி சங்கிலியின் உட்கட்டமைப்பை வலுவாக்கவும், வேகமாக அதிகரித்து வரும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, விரைவாக பொருட்களைக் கொண்டு சேர்ப்பதை மேலும் மெருகேற்றிக்கொள்ளும் வகையிலும் ஃப்ளிப்கார்ட், அதானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது.
அதானி குழுமத்துடன் ஃப்ளிப்கார்ட் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, சென்னையில் உள்ள அதானிகோனெக்ஸ் பிரைவேட் லிமிடெட் கிளையில், ஃப்ளிப்கார்ட் தனது டேட்டா சென்டரை (data centre) அமைக்கவுள்ளது. டேட்டா சென்டரில்தான், நிறுவனம் தொடர்பான தகவல்கள் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், 5 லட்சத்து 34 ஆயிரம் சதுர அடியில் ஃபுல்பில்மென்ட் சென்டரை (fulfilment centre) கட்டி, அதை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடவுள்ளது. ஃபுல்பில்மென்ட் சென்டரில்தான் வாடிக்கையாளர்களின் பொருட்கள் சேமிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.