வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், தினமும் நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் நவம்பர் 19 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலை, எங்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, மின்சார சட்டத் திருத்த மசோதா, காற்று தர மேலாண்மை ஆணைய அவசரச் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெறுவது, இறந்த எங்களின் நண்பர்களுக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவது ஆகிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்தனர்.
மேலும் திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் எனவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற இருந்த ட்ராக்டர் பேரணியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுமாறு மாநிலங்களையும், ரயில்வேவையும் பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், குறைந்தபட்ச ஆதார விலை, போராட்டத்தில் இறந்த விவசாயிகள், லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில், தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.