போலி கோழி முட்டை விற்கப்பட்டது ஒரு கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வரிகொண்டபாடு என்ற கிராமத்தில் மினி வேன் ஒன்றில் வந்த நபர்கள், குறைந்த விலையில் முட்டை விற்பதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். 30 முட்டைகள் வெறும் 130 ரூபாய் மட்டும்தான் என கூறியதால், சலுகை விலையில் கிடைக்கிறதென்று அப்பகுதி மக்கள் முட்டைகளை வாங்கியுள்ளனர். இப்படி போட்டி போட்டுக்கொண்டு வாங்கிய முட்டைகளை அவரவர் வீடுகளில் சமைக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒருமணி நேரம் ஆகியும் முட்டை வேகாததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சந்தேகமடைந்த மக்கள் முட்டையை உடைத்து பார்த்தபோது அதற்குள் ஒன்றும் இல்லை என தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். சில முட்டைகள் ரப்பர் போன்று உடையவே இல்லை. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்குச் சென்று இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். போலி முட்டை விற்கப்பட்டு ஏமாற்றப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.